Tuesday, November 8, 2016

மதுரை அருகே கார், பஸ்சில் சோதனை : 17 கிலோ வெள்ளி கொலுசுகள் சிக்கியது

மதுரை அருகே கார், பஸ்சில் சோதனை : 17 கிலோ வெள்ளி கொலுசுகள் சிக்கியது

மதுரை:  மதுரை அருகே நடந்த வாகன சோதனைகளில், உரிய ஆவணமின்றி கார், பஸ்சில் கொண்டு வரப்பட்ட 17.75 கிலோ வெள்ளி கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு மதுரை - தேனி ரோட்டில்,  காமராஜர் பல்கலைக்கழகம் அருகே பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தேனியிலிருந்து மதுரை வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 10 கிலோ வெள்ளி கொலுசுகள், ரொக்க பணம் ரூ.85 ஆயிரத்து 100 இருந்தன. வெள்ளியின் மதிப்பு ரூ.2 லட்சம். இவற்றிற்கு முறையான ஆவணம் ஏதும் இல்லை. இதனை மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த சங்கர் கொண்டு வந்திருந்தார்.  இதேபோல, தேனியில் இருந்து மதுரை வந்த அரசு பஸ்சை சோதனையிட்டபோது, 7.75 கிலோ வெள்ளி கொலுசுகள் இருந்தன. 

இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம். இதனை மதுரையை சேர்ந்த தர்மதுரை கொண்டு வந்திருந்தார். இவரிடமும் ஆவணங்கள் இல்லை.  இதே பஸ்சில் திருச்செந்தூரை சேர்ந்த ராமர் ரொக்க பணம் ரூ.75 ஆயிரம் வைத்திருந்தார். அவரிடமும் முறையான ஆவணம் இல்லை. கொலுசுகள், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும், ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள வெள்ளி,  ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 100 ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நேற்று வரை மொத்தம் 90 லட்சத்து 49 ஆயிரத்து 590 ரொக்க பணமும், ரூ.2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 147 மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

துணைராணுவம் கொடி அணிவகுப்பு

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களின் அச்சம் போக்கி, நம்பிக்கையூட்டும் விதமாக போலீசார், துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் நம்பிக்கையூட்டுவதற்காக, இடைத்தேர்தல் நடக்க உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இசை வாத்தியங்கள் முன்னே செல்ல, போலீசார், ராணுவ வீரர்கள், வருவாய்த்துறையினர், அதிகாரிகள் நடந்தும், வாகனங்களிலும் அணிவகுத்துச் சென்றனர். 

தஞ்சை:  ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 32வது பட்டாலியனை சேர்ந்த ஒரு துணை ராணுவப்படை வீரர்கள் கூடுதல் கமாண்டர் சைதன்யா தலைமையில் நேற்று தஞ்சை ரயில் நிலையத்துக்கு உழவன் எக்ஸ்பிரசில் வந்தனர். இவர்கள் நாளை முதல் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

No comments:

Post a Comment